Sunday, July 15, 2012

செருப்புத் தைக்கும் தொழிலாளி

ஒரு ஜோடி செருப்பினிலே
ஒரு செருப்பு அறுந்தாலே
உடனேதான் தேடுவீரே
என்னைத்தான் நாடுவீரே

காலடியில் கிடக்கின்றேன்
காலணிகள் தைக்கின்றேன்
ஏளனமாய் யாருமெனை
ஏறஇறங்கப் பார்க்காதீர்

உழைப்பையே மூச்சாக்கி
உழைக்கின்றேன் தெருவோரம்
உருப்படியாய் கிடைப்பதுவே
ஒருரூபாய் இரண்டுரூபாய்

வெயில்தாங்கி மழைதாங்கி
புயல்தாங்கி இடிதாங்கி
புணரமைப்பேன் செருப்பைத்தான்
எனக்கென்று கடையில்லை
நடைபாதை கடையாச்சு

கேட்டபணம் தாருங்கள்
கேட்டதற்கு மேல்வேண்டாம்
முகம்சுளித்துத் தரவேண்டாம்
அகமகிழ்ந்து தாருங்கள்

இலவசங்கள் தந்தென்னை
இழிபிறவி ஆக்காதீர்
இலவசத்தை விரும்பாத
உழைப்பாளி நான்தானே!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. நந்தலாலா (இணைய இதழ்) - 11-08-2012

2. அரசியல் டுடே (இணைய இதழ்) - 29-11-2012

No comments: